வெயில் வேய்ந்திருந்த சாலையில்
பெரிய சைக்கிளைத்
தாவித்தாவி
மிதித்துப் போன சிறுவன்
நாலு மின்கம்பிகளின்
நீள நிழல்களைக் கண்டான்
விளையாட்டு மனம்
சக்கரமாகச் சுழலத் தொடங்கியது
இரு மின்கம்பி நிழல்களின்
இடைப்பட்ட வெயிலை
நிழலின் மதிலாக நினைத்து
அதன் மேல்
ஒடித்தொடித்து வளைந்து
விளம்புகளில் நழுவிநழுவி
வித்தை காட்டிக் கொண்டே
சில மிதிகள் போனான்
எதிர்பாராமல்
திடுமென பின்னால் வந்தது
சிற்றுந்தின் பெருஞ் சத்தம்
அதில் நிழல் கம்பிகளில் தொற்றிய
மின்சாரம் பாய்ந்து
தூக்கியடிக்கப்பட்டான்
மதிலிலிருந்து சாலைக்கு.
நன்றி: வார்த்தை
Wednesday, May 27, 2009
Saturday, May 23, 2009
மிருதகரம்
வார் பிடிக்காத மிருதங்கத்தைத்
தூக்கித்தூக்கி
ஒருவன்
மஞ்சள் வண்ண வீட்டு வாசல் முன்
ஐந்து நிமிடம் விடாமல் வாசித்தான்
டக்குடக்கு
டகடகா
டக்குடக்கு
டகடகா
டக்குடக்கு
டக்டக்குடக்டக்கு
க்குக்குடகுடகுடகுடக்கு
ஐம்பது பைசாவை
மகளிடம் கொடுத்தனுப்பிவிட்டு
உள் பக்கமாய் ஓடியவன்
உலகின் கடைசி விளிம்பைக்
கடக்க இயலாதென்பதுபோல
கொல்லைச்சுவரை முட்டிக்கொண்டு
நின்றான் தகப்பன்
வாங்கிப் பார்த்து
துணிப்பைக்குள் பைசாவை
அலுத்தெறிந்து நகர்ந்தவன்
நாய்களின் குரைப்புகளோடு
பச்சை வண்ண வீட்டு வாசல் முன்
பத்து நிமிடம் விடாமல் வாசிக்கிறான்
டக்குடக்கு
டகடகா
டக்குடக்கு
டகடகா
டக்டக்குடக்டக்கு
க்குக்குடகுடகுடகுடக்கு
Subscribe to:
Posts (Atom)